குழந்தைகள் வாந்தி எடுக்க ஆரம்பித்தால் காலம் தாழ்த்தாமல் கை வைத்தியம் செய்ய வேண்டும். பெரும்பாலும் ஆபத்தில்லாத பக்கவிளைவுகள் இல்லாத வைத்தியம் நம் வீட்டிலேயே உண்டு. ஆயுர்வேத சிகிச்சை மூலம் குழந்தைகளுக்கு உண்டாகும் வாந்தியை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
இஞ்சி உடன் தேன்
குழந்தைகள் அடிக்கடி வாந்தி பிரச்சனையை எதிர்கொண்டால் சிறு துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கி அதன் சாறை மெல்லிய துணியில் வடிகட்டி எடுத்து அதனுடன் சம அளவு தேன் கலந்து கொடுக்க வேண்டும். இது வாந்தியை கட்டுப்படுத்துவதோடு குமட்டல் உண்டாகும் உணர்வையும் கட்டுக்குள் வைக்கும்.
புதினா ஜூஸ்
புதினா வைட்டமின் சி கொண்டது. நோயெதிர்ப்பு சக்தி அளிக்க கூடியது. புதினா இலைகளை காம்பு நீக்கி சுத்தம் செய்து அதனுடன் சில துளி எலுமிச்சை சாறு, சில துளி இஞ்சி சாறு சேர்த்து கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். தினமும் இரண்டு வேளை 2 டீஸ்பூன் அளவு கொடுக்கலாம். வளர்ந்த பிள்ளைகளுக்கு கால் டம்ளரில் பாதி அளவு கொடுக்கலாம்.
பெருஞ்சீரக விதைகள்
பெருஞ்சீரகம் என்று சொல்லகூடிய சோம்பு விதைகளை பெரியவர்கள் மென்று சாப்பிடுவதன் மூலம் வாந்தியை தவிர்க்கலாம். ஆனால் குழந்தைகள் சோம்பு விதைகளை மென்று சாப்பிட மாட்டார்கள். அதற்கு மாற்றாக நீரை கொதிக்க வைத்து அதனுடன் சோம்பு விதைகளை சேர்த்து கொடுக்கலாம். இதனால் வாந்தி கட்டுப்படுவதோடு நீரிழப்பும் சமன் ஆகும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையை பொடியாக்கி சலித்து விடவும். மெல்லிய வெள்ளைத்துணியில் சலித்து எடுக்கவும். ஒரு கப் வெந்நீரில் பொடித்த இலவங்கப்பட்டையை சேர்த்து இளஞ்சூடாக வைக்கவும். இனிப்புக்கு தேவையெனில் தேன் சேர்த்து விடவும். இது வாந்தியை குணப்படுத்த உதவுகிறது. சிறு குழந்தையாக இருந்தால் இலவங்கப்பட்டை அளவு குறைத்து கொடுக்கவும். வாந்தி இருக்கும் போது இரண்டு வேளை இதை கொடுக்கவும்.
சீரகம்
வெதுவெதுப்பான நீரை காய்ச்சி இளஞ்சூடாக இருக்கும் போது சீரகத்தை வறுத்து பொடித்து அதில் சேர்க்கவும். இந்த கரைசலை டீ போன்று பொறுமையாக குடிக்கலாம். சீரகத்தை பொடித்து, ஏலக்காய் தூள், தேன் மூன்றையும் கலந்து குடித்து வந்தால் வாந்தி குணமாகும். சற்று வளர்ந்த பிள்ளைகள் இருந்தால் கிராம்புவை கொடுக்கலாம். அதை மென்று சாப்பிட்டால் போதுமானது.
ஜாதிக்காய்
சிட்டிகை ஜாதிக்காய் எடுத்து ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து சிறிது சீரக விதைகளை சேர்த்து குடிக்க செய்யலாம். இவை வாந்தியையும் குமட்டலையும் கட்டுப்படுத்த செய்யும்.
வெங்காயம் மற்றும் இஞ்சி சாறு
சிறிய வெங்காயம், சிறுதுண்டு இஞ்சி இரண்டையும் எடுத்து தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும். இரண்டையும் இடித்து இதன் சாறை எடுத்து இனிப்புக்கு தேன் சேர்த்து கொடுக்கலாம். இது வாந்தியை கட்டுப்படுத்த உதவும்.