உடல் வெப்பத்தை குறைக்கும் இயற்கை பானங்கள்

உலகம் முழுக்க மக்கள் இந்த உடல் உஷ்ண பிரச்சனையை எதிர்கொள்ளவே செய்கிறார்கள். உடல் வெப்பநிலை என்பது சீராக இருக்கும் வரை உடலில் பாதிப்பு நேராது.உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு இல்லாமல் அதிக வெப்பத்தை கொண்டிருப்பதே உடல் உஷ்ணம் என்கிறார்கள். உடலின் வெப்பநிலை 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் வரம்புகளுக்கு இடையில் உள்ளது.

உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது உடலில் உஷ்ணம், கண்களில் எரிச்சல், வயிற்றில் அசெளகரியம், புண்கள், அமிலத்தன்மை அதிகரிப்பது, வாயு போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டாக்க கூடும். இது ஏன் உண்டாகிறது எப்படி தவிர்ப்பது என்று பார்க்கலாம்.

இளநீர்

இளநீருக்கே உரித்தான குளிர்ச்சி உடலுக்கு கிடைக்கும். இளநீர் உடலுக்கு உடனடி ஆற்றல் பானமாக உள்ளது. இது புத்துணர்ச்சி தரும் பானமாக செயல்படுகிறது. இளநீரில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோஒலைட்டுகள் வெப்பநிலையை மாற்றி உஷ்ணத்தை தணிக்கும். இளநீர் குடிப்பது இரண்டு விதமான நன்மைகளை உடலுக்கு அளிக்கும். இது உடலுக்கு உண்டான நீரிழிப்பை தடுக்கும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

​வெந்தய தேநீர்

உடல் உஷ்ணமாக இருக்கும் போது காபி, டீ, பால், சத்துபானங்கள் போன்றவை தவிர்க்க வேண்டியது அவசியம். அதற்கு மாற்றாக வெந்தயத்தை கொண்டு தேநீர் தயாரித்து குடிக்கலாம். வெந்தய தேநீர் குடிக்கும் போது உடலில் இருந்து வியர்வை வெளியேறக்கூடும். பிறகு உடல் குளிர்ச்சியை அடையும். உஙளுக்கு சூடாக குடிக்க விருப்பமில்லையென்றால் அதை ஆறவைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குடிக்கலாம்.

வெந்தயம் உடலில் இருகும் நச்சுத்தன்மையை வெளியேற்றி உடல் உஷ்ணத்தை குறைக்க செய்யும்.

புதினா தேநீர்

புதினா இலைகள் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் தன்மை கொண்டவை. வைட்டமின் சி நிறைந்த புதினா இலைகள் உடலுக்கு ஆற்றலும் தரக்கூடியவை. ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து புதினா இலைகள் அரை கைப்பிடி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

சில நிமிடங்கள் கழித்து இலைகளின் சாறுகள் முழுக்க இறங்கி இருக்கும். பிறகு அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். உடல் உஷ்ணத்தால் கண்களில் எரிச்சல் வயிற்று வலி போன்றவற்றை தடுக்கும்.

நீர் மோர்

உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சத்தான பானம்.தயிரை கடைந்து வெண்ணெய் நீக்கி நீர் மோராக்கி சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். மோரில் புரோபயாட்டிக், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. உடல் உஷ்ணம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் இந்த மோர் ஒன்றே போதும் உடலை குளிர்ச்சி செய்துவிடும். ஒருவேளை உங்களுக்கு குளிர்ச்சி இருந்தால் அதில் கால்டீஸ்பூன் அளவு இஞ்சிசாறு சேர்த்து கொடுக்கலாம்.

வைட்டமின் சி

வைட்டமின் சி நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை என எல்லாமே உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை. உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க மாதுளம்பழச்சாறை தினசரி உட்கொள்ளலாம். எலுமிச்சை சாறை பிழிந்து அதில் உப்பு, சர்க்கரை இரண்டையும் சேர்த்து குடிக்கலாம். இது உடல் உஷ்ணத்தையும் தணிக்கும். உடன் உடலுக்கு ஆற்றலையும் கொடுக்கும். எனினும் மாலை நேரங்களில் இதை குடிக்காமல் தவிர்க்க வேண்டும்.