அரிக்கும் பொடுகை விரட்டி அடர்த்தியா முடி வளர

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கரைய விட்டு அதைத் தலையில் தேயுங்கள். இரவில் தலையில் தேய்த்து அப்படியே விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் தலைக்குக் குளியுங்கள். தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் நன்கு தேயத்து அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பின்பு தலையை ஷாம்பு கொண்டு அலசினால் தலைமுடி பளபளப்பாகவும் பொடுகு இல்லாமலும் இருக்கும்.

வேப்பிலை

ஒரு கைப்பிடியளவு வேப்பிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதை அப்படியே மூடி வைத்து விடுங்கள். நன்கு ஆறியதும் தலைக்கு குளிக்கும் போது இந்த நீரில் தலைமுடியை அலசுங்கள். பொடுகு பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். தலைக்கு ஷாம்பு தேய்த்துத் தலையை அலசிய பிறகு, தலைக்கு வேப்பிலை நீரை ஊற்றி அலசுங்கள். இது தலைமுடிக்கு நல்ல கண்டிஷ்னராகவும் செயல்படும். பொடுகுத் தொல்லையும் மறையும்.

வால்மிளகு

வழக்கமாக நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் மிளகும் வால்மிளகும் வேறு வேறு. மிளகு போலவே பின்புறம் சிறிய குச்சியுடன் இருக்கும். இந்த வால்மிளகை பொடி செய்து பாலில் குழைத்து உச்சந்தலையில், முடியின் வேர்க்கால்களில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசினால் பொடுகு நீங்கும்.

துளசி

கருந்துளசியுடன் 10 மிளகையும் சேர்த்து நன்கு மை போல அரைத்துக் கொள்ள வேண்டும். அதைத் தலையில் தேய்த்து குளித்தால் பொடுகால் தலையில் ஏற்படும் காயங்கள் ஆறும். துளசி, மிளகு இரண்டுமே உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும் என்பதால் அடிக்கடி செய்ய வேண்டாம். மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்தால் போதுமானது.

எலுமிச்சை

எலுமிச்சை பொடுகை விரட்டும் தன்மை கொண்டது. எலுமிச்சை சாறை நேரடியாகத் தலையின் வேர்க்கால்களில் தேய்த்து ஊறவிட்டுக் குளிக்கலாம். அதேபோல எலுமிச்சை பழத்தின் சாறைப் பிழிந்து அதனுடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முடியின் வேர்க்கால்களில் நன்கு தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கும்.