உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் அக்ரூட் பருப்பு

முந்திரி, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற பருப்பு வகைகளை தினமும் சாப்பிடுவதினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் வால்நட் என்று சொல்லப்படும் அக்ரூட் பருப்பின் நன்மைகள் என்ன என்பதை இதில் தெளிவாக பார்ப்போம்.

தினமும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கிய உணவுகளில் அக்ரூட் பருப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதனை வாதுமைப் பருப்பு என்றும் அழைப்பார்கள்.

அக்ரூட் பருப்பில் கொழுப்பு அதிகம் உள்ளது என கருதி பலரும் இதனை சாப்பிட மறுக்கிறார்கள். உண்மையில் அக்ரூட் பருப்பில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு அவுன்ஸ் அக்ரூட் பருப்புகளில் 2.5 கிராம் ஒமேகா 3 கொழுப்புகள், 4 கிராம் புரதம் மற்றும் 2 கிராம் நார்ச்சத்து ஆகியவை அடங்கி உள்ளன.

அக்ரூட் பருப்பு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

அக்ரூட் பருப்பில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின்கள் மூளையின் ஆற்றலை அதிகரிக்க செய்யும். மேலும் இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் ‘டிமென்சியா’ என்ற ஞாபக மறதி நோய் உண்டாகாமல் தடுக்கலாம்.

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை தடுக்கும் சக்தி அக்ரூட் பருப்பில் உள்ளது. எனவே பெண்கள் தினமும் 5 அக்ரூட் பருப்பு சாப்பிடுவது நல்லது. மேலும் இது கணைய புற்று நோய் அபாயத்தை குறைப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இரவில் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் தினமும் அக்ரூட் பருப்பை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஏனென்றால் இதில் உள்ள மெலட்டோனின் என்ற ஊட்டச்சத்து மூளைக்கு ஓய்வு கொடுத்து நல்ல தூக்கத்தை தரும்.

அக்ரூட் பருப்பு, சாரப்பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து போடி செய்து அதனை சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் கை கால் நடுக்கம், நரம்பு தளர்ச்சி போன்றவை குணமாகும்.