கோடைகால சளியில் இருந்து விடுபட வீட்டு வைத்தியம்

பூண்டு

பூண்டை தோலுரித்து 4 பல் அளவு எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வறுக்கவும். பிறகு எலுமிச்சை சாறு இலேசாக பிழியவும். பிறகு தேனில் நனைத்து அப்படியே எடுத்து பொறுமையாக மெல்லவும். இளஞ்சூடாக இருக்கும் போதே சாப்பிட்டால் பூண்டு வாடை இருக்காது.சளி குறையும் வரை தினமும் இரண்டு வேளை இதை சாப்பிட வேண்டும். பூண்டில் இருக்கும் பாக்டீரியா வைரஸை மேற்கொண்டு பரவாமல் தடுக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கூடுதலாக உடலில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. குழந்தைகளுக்கும் ஒருவேளைக்கு ஒரு பல் வீதம் நாளொன்றுக்கு இரண்டு பல் அளவு பூண்டு கொடுக்கலாம்.

இஞ்சி

இஞ்சி காரமிக்க பொருளாக இருந்தாலும் இவை இனிப்பான தேநீரில் சேரும் போது புது சுவை கொடுக்ககூடியது. இஞ்சியை தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கி இலேசாக இடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் நீரில் இஞ்சி துண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து அவை பாதியாகும் வரை சுண்ட வைத்து பிறக்கு தேன் சேர்த்து குடிக்கவும். தினமும் இரண்டு அல்லது 3 வேளை வரை எடுக்கலாம். இஞ்சி வைரஸை அழிக்ககூடியது. இது மூக்கு துவாரங்களில் நாசியில் வீக்கத்தை குறைக்கும். சளி அதிகமவதை தடுக்கும். இளஞ்சூட்டில் பருகும் போது நாசிதுவாரங்களின் அடைப்பு நீங்கும். பெரியவர்கள் அதிகப்படியான சளி உபாதைக்கு உள்ளானால் இஞ்சியை சிறுதுண்டுகளாக நறுக்கி மேலாக உப்பு தூவி அப்படியே வாயில் இட்டு மெல்ல வேண்டும். சற்று கடினமே என்றாலும் நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காய சிரப்

குழந்தைகளுக்கு சளி டானிக் போன்று எல்லோருக்கும் இயற்கை டானிக் ஆக செயல்படுவது வெங்காய சிரப். சாம்பார் வெங்காயத்தை தோல் உரித்து நசுக்கி சாறை மட்டும் எடுக்கவும். அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க வைத்து தேவையெனில் எலுமிச்சை சாறு சேர்த்து இனிப்புக்கு தேன் சேர்த்து கொள்ளவும். ஒருபங்கு கொதிக்க வைத்த சாறுக்கு இரண்டு பங்கு தேன் கலந்து குடிக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு கொடுக்கும் போது வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி கண்ணாடி பாத்திரத்தில் போட வேண்டும். பிறகு வெங்காயம் மூழ்கும் அளவு தேன் விட வேண்டும். மறுநாள் காலை அந்த தேனில் வெங்காயத்தின் சாறு நன்றாக ஊறியிருக்கும். அதில் ஒரு டீஸ்பூன் அளவு குழந்தைக்கு ( வயதுக்கேற்ப) கொடுத்துவந்தால் சளி காணாமல் போகும். மூன்று நாட்களுக்கு மட்டும் தேவையான அளவு சிரப் தயாரிக்க வேண்டும். அவ்வபோது தயாரித்து பயன்படுத்த வேண்டும். வெங்காயத்தில் இருக்கும் ஃப்ளேவனாய்ட் சளி யை உண்டாக்கும் நுண்ணுயிரியை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.

இலவங்கபட்டை

இலவங்கம் வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தி தொற்று அதிகரிக்காமல் பாதுகாக்கிறது. குளிர் மற்றும் எல்லா காலங்களிலும் சளிக்கு மருந்தாக இதை பயன்படுத்தலாம். இலவங்கபட்டை சிறுதுண்டு அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தேன் சேர்த்து இளஞ்சூட்டில் குடித்துவர வேண்டும். தினமும் இரண்டு முறை குடித்தாலே போதுமானது. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது இந்த நீரை விரும்பமாட்டார்கள். அதனால் இலவங்கபட்டையை பொடித்து வைத்துகொண்டு காலை,இரவு இரண்டு வேளையும் அரை டீஸ்பூன் தேனில் 3 சிட்டிகை அளவு இலவங்கபட்டை சேர்த்து குழைத்து கொடுத்தால் சளி குறையும். படிப்படியாக குணமாகும். அதுவரை இதை கொடுக்கலாம்.

மிளகு, மஞ்சள், பால்

காலங்காலமாக காய்ச்சல் காலங்களில் பயன்படுத்தும் கை வைத்தியத்தில் முக்கியமானது இது. மஞ்சள் கிருமி நாசினி, காரத்தன்மை கொண்ட மிளகில் பைபர் கலவை உள்ளன. இவை இயற்கையாகவே சிறந்த மருத்துவரை போன்று செயல்படகூடியவை. ஒரு டம்ளர் பாலில் 3 மிளகை நசுக்கி சேர்த்து கொதிக்க வைக்கவும். அவை சூடானதும் இறக்கி தேவையான அளவு தேன் சேர்க்கவும். பிறகு மஞ்சள் தூள் கால் பங்குங்கும் குறைவான அளவு சேர்த்து கலக்கி சூடாக குடிக்கவும். உங்கள் சளி உபாதை குறையும் வரை தினமும் இரவு நேரத்தில் இதை எடுத்துகொள்ளலாம். இதனால் சளி தீவிரமாகாது. தொற்றும் பரவாமல் தடுக்கப்படும்.